நாடு முழுவதும் ரயில்பாதைகளைப் புதுப்பிக்கும் பணிக்காக ரூ.2,435.25 கோடியை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகளை தனியார் வசம் ஒப்படைத்தாலும், பழைய பாதைகளை சீரமைத்து புதுப்பிக்கும் பணிகளை ரயில்வே பணியாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தண்டவாளம் புதுப்பிக்கும் பணியைச் செய்யும் 'டிஆர்டி' (Track Relaying Train) எனப்படும் ரயில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் இந்த இயந்திரங்களின் எண்ணிக்கை, தேவையை முழுமையாக நிறைவேற்றும் அளவுக்கு இல்லை. நாடு முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 207 கிலோமீட்டர் நீளத்துக்கு ரயில்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் சேர்ந்து ரயில்களின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2016-ம் ஆண்டில் நாள்தோறும் 13,019 பயணிகள் ரயில்களும், 5,786 சரக்கு ரயில்களும் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 2026-ம் ஆண்டில் தினமும் 25,751 பயணிகள் ரயில்களும், 11,700 சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.ரயில்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதால் தண்டவாளங்களின் தேய்மானம் அதிகரித்து, அவற்றைத் தாங்கும் கட்டைகளும் சேதமடைகின்றன. இதனால் தண்டவாளங்களை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேவையை கருத்தில் கொண்டுதான், ரயில்பாதை புதுப்பித்தலுக்கான டிஆர்டி ரயில்களை வாங்க இந்தியன் ரயில்வே ரூ.2,435.25 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்தத் தொகையைக் கொண்டு புதிதாக 26 நவீன டிஆர்டி ரயில்கள் வாங்கப்பட உள்ளன. இந்த இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனமே ரயில்களைக் கையாள்வது குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகளுக்கு முழுமையான பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் மாற்றும் பொறுப்பையும், தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை பராமரிப்புப் பொறுப்பையும் அந்த நிறுவனமே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள இயந்திரங்கள் ஒரு கிலோமீட்டர் நீள ரயில்பாதையைப் புதுப்பிக்க சுமார் 4 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றன. இந்த நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதே ரயில்வேயின் முக்கிய இலக்காகும். எந்த நிறுவனம் புதுப்பிக்கும் நேரத்தைக் குறைத்து, தரமான ரயில்களை வழங்குகிறதோ அந்த நிறுவனத்திடமிருந்தே இந்த ரயில்கள் வாங்கப்படவுள்ளன. ரயில்பாதை புதுப்பித்தல் பணிகள் விரைவாக நடைபெறும்போது, பராமரிப்புப் பணிகளுக்காக அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்படுவதும், ரயில்கள் தாமதமாக இயங்குவதும் படிப்படியாகக் குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.